Monday, September 30, 2013

பிரான்ஸில் இடம்பெற்ற தியாகதீபம் திலீபனின் நினைவெழுச்சி நிகழ்வுகள்






பிரான்ஸில் இடம்பெற்ற தியாகதீபம் திலீபனின் நினைவெழுச்சி நிகழ்வுகள்

தியாகதீபம் லெப்டினன்ட் கேணல் திலீபன் என்ற அடிமுடி தோன்றா அற்புதத் தியாகியின், 26ம் ஆண்டு நினைவெழுச்சி நாள் நிகழ்வு இன்று, பாரிசின் புறநகர்ப் பகுதியான மொந்ரோயில் பகுதியில் அமைந்துள்ள மண்டபத்தில் மிகச் சிறப்பாகவும் எழுச்சிடனும் நடைபெற்றது.
பிரான்ஸ் தமிழர் நடுவத்தின் ஏற்பாட்டில், தியாக தீபம் திலீபனின் வணக்க நிகழ்வுகள் தேசியச் செயற்பாட்டாளர் திரு. பார்த்திபன் தலைமையில் மாலை ஆறு மணிக்கு
ஆரம்பித்தன.

பொதுச்சுடரினை, தமிழர் நடுவத்தின் இணைப்பாளர் திரு. சந்தோஸ் ஏற்றிவைக்க, ஈகைச் சுடரினை தேசியச் செயற்பாட்டாளர் திரு. பாலா அவர்கள் ஏற்றிவைத்தார்.

மலர் வணக்கத்தினை எழுச்சிப் பாடகர் திரு. இந்திரன் மற்றும் திருமதி செல்வி ஆகியோர் ஆரம்பித்து வைக்க, தொடர்ந்து பொதுமக்கள் திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி
வணக்கம் செலுத்தினர்.

நிகழ்வில் எழுச்சிப் பாடல்களும், எழுச்சி நடனமும், இடம்பெற்றன. திலீபனின் நினைவு சுமந்து, தேசியச் செயற்பாட்டாளர் திரு. தமிழரசன் உரையாற்றுகையில்,

புலம் பெயர்ந்து வாழும் மக்களின் கைகளில் மிகப் பெரும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருப்பதையும், நாடுகடந்த தமிழீழ அரசின் பாத்திரம் குறித்தும் எடுத்துக்கூறியதுடன், நாடுகடந்த தமிழீழ அரசைப்பலப்படுத்த வேண்டிய தேவை குறித்தும் எடுத்துரைத்தார்.

தமிழர் நடுவ இணைப்பாளர் திரு. சந்தோஸ் உரையாற்றுகையில்,

மக்களுக்காக உணவு தவிர்த்து போராட்டம் நடத்தி தன் இன்னுயிரை திலீபன் ஈகம் செய்து, இருபத்தாறு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், மக்கள் புரட்சி வெடிக்கட்டும்
சுதந்திர தமிழீழம் மலரட்டும் என்ற அவரது இறுதி ஆசையை நிறைவேற்ற, தமிழ்மக்கள் ஒற்றுமையாகப் பாடுபடவேண்டும்.

தாயக மக்கள் எழுச்சியுடன் இருப்பதையே கடந்த மாகாணசபைத் தேர்தல் முடிபு வெளிப்படுத்தி நிற்பதாகவும் அவர் தனதுரையில் குறிப்பிட்டார்.

நாடுகடந்த தமிழீழ அரசின் அமைச்சர்களான திரு. கொலின்ஸ், திரு. சுதன்ராஜ் ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில்,

திலீபனின் நினைவுகளை மனக்கண் உணர்வுபூர்வமாகக் கொண்டுவந்ததுடன், இந்தத் தியாகங்களுக்கான பலனை அறுவடை செய்வதற்கு புலத்துமக்கள் உளப்பூர்வமாக பணியாற்ற முன்வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

இதேவேளை, தியாக தீபம் திலீபனின் நினைவுசுமந்து, இளையோருக்கான சதுரங்கப் போட்டியை தமிழர் சதுரங்க ஒன்றியம் ஒழுங்குசெய்து நடாத்தியிருந்தது. காலை 10 மணிக்கு ஆரம்பித்து மதியம் தாண்டியும் தொடர்ந்த போட்டியில், முப்பதுக்கும் மேற்பட்ட இளையோர், இளம் சிறார்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

தமிழர் நடுவம்- பிரான்ஸ்

No comments:

Post a Comment